Thursday, November 22, 2007

மனித உரிமை ஆணையத்தின் எட்டப்(ப) பார்வை!


மார்க்சிஸ்ட் கட்சியையும் அதன் தலைமையிலான இடது முன்னணியையும் தாக்குவதற்கு அறிவு ஜீவி வட்டாரத்தில் ஒரு படையே கிளம்பியிருக்கிறது. மேலோட்டமான சில சிந்தனைகளை வைத்துக்கொண்டு மார்க்சிஸ்ட்டுகள் குறித்து அவநம்பிக்கை பிரச்சாரம் செய்ய முயன்ற இவர்கள், இப்போது மேற்கு வங்கத்தின் நந்திகிராமம் பிரச்சனையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறார்கள். வன்முறை மட்டுமே ஒட்டுமொத்த அரசியல் இலக்காகக் கொண்ட நக்சலைட்டுகளின் பிடியில் ஒரு வட்டாரமே சிக்கிக்கொண்டாலும் பரவாயில்லை, இடதுமுன்னணியின் செல்வாக்கை எப்படியாவது குறைத்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டதுபோல் இவர்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். மார்க்சிஸ்ட்டுகள் சொல்கிற எந்த விளக்கத்தையும் கேட்க மாட்டோம் என்ற, "கொள்கை உறுதியோடு இவர்கள் தங்களுடைய பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.

இந்தப் படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரும் இணைந்துவிட்டாரோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஏற்கெனவே நந்தி கிராமத்தில் என்ன நடந்தது என்பதை ஆராய்வதற்கான நடவடிக்கைகளை ஆணையம் துவங்கியிருக்கிறது. புத்ததேவ் அரசு அதற்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது.

இந்நிலையில் ஆணையத்தின் தலைவர் எஸ்.ராஜேந்திர பாபு, நந்தி கிராமத்தையும் குஜராத்தையும் ஒப்பிட்டு, கருத்துக் கூறியிருக்கிறார். குஜராத்தில் சட்டம் ஒழுங்கை மீறி மாநில அரசின் ஆசீர்வாதத்தோடு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மதவெறிக் கலவரத்தையும், நந்தி கிராமத்தில் மக்களை வன்முறையாளர்கள் பிடியிலிருந்து மீட்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கையையும் ஒப்பிடுவதற்கு இவருக்கு எப்படித்தான் மனம் வந்ததோ?
குஜராத்தில் நடந்தது இந்துத்துவா கூட்டத்தால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட படுகொலை அரசியல். சிறுபான்மை மக்கள் - குறிப்பாக இஸ்லாமிய மக்கள் - பெரும்பான்மையினருக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற "பாடத்தை" போதிப்பதற்காக அந்த அரங்கேற்றம் நிகழ்த்தப்பட்டது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம் மக்கள் கொலை செய்யப்பட்டனர். அந்தக் கொலைகளுக்கு அரசாங்கப் பதவிகளில் இருந்தவர்களே கூட எப்படியெல்லாம் வழிகாட்டினார்கள், எப்படியெல்லாம் காவல்துறை கைகட்டிக்கொண்டு இருந்தது என்பது குறித்து ஏராளமான செய்திகள் வந்துள்ளன. ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்த சிசுவை வெளியே எடுத்து நெருப்பில் வீசுகிற அளவிற்கு மதவெறி போதை தலைக்கேறிய அந்தக் கூட்டம் கொலைவெறியாட்டம் நடத்தியது. 2002ம் ஆண்டு அந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவிகள் தங்களுடைய இடங்களுக்கு திரும்பிச் செல்ல முடியாமல் அகதிகள்போல் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

நந்தி கிராமத்திலோ மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஒரு ஆபாசக் கூட்டணி ஏற்படுத்திக்கொண்டு அந்த வட்டாரத்தைக் கைப்பற்றுவதற்கு சதி செய்தன. அந்தச் சதியின் ஒரு கூறாகவே அப்பட்டமான வலதுசாரிக் கட்சிகளான பாஜக, மம்தாவின் திருணாமுல் காங்கிரஸ் ஆகியவற்றோடு அதிதீவிர மாவோயிஸ்டுகளும் சேர்ந்துகொண்டார்கள். தீவிரவாதம் குறித்து மேலும் கீழும் குதிக்கும் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் வகையறாக்கள் கொஞ்சமும் கூச்சமின்றி இந்த அதிதீவிரவாதிகளின் ஒத்துழைப்பை நாடினர். அதேபோல், கம்யூனிஸ்ட்டுகளையும் மற்ற இடதுசாரிகளையும் ஒட்டுக்காகக் கையேந்துபவர்கள் என்று ஓயாமல் கூறிக்கொண்டிருக்கும் நக்சலைட்டுகள் இந்தக் கும்பலோடு உறவு வைத்துக்கொள்ள தயங்கவில்லை.
அறம் வழுவிய இக்கூட்டணியால் சுமார் நான்காயிரம் மக்கள் அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். நில உரிமை பாதுகாப்புக்குழு என்ற பெயரில் ஏற்படுத்தப்பட்ட அந்தக் கூட்டணி, இந்த மக்களை அவர்களுடைய சொந்த நிலங்களிலிருந்து விரட்டியடித்தது. அவ்வாறு விரட்டப்பட்டவர்களில் தலித்துகள், முஸ்லிம்கள், விவசாயத் தொழிலாளர்கள், கைவினைத் தொழிலாளர்கள் என அனைத்துப் பிரிவினரும் இருக்கிறார்கள். இந்த ஆண்டில் மட்டும் இக்கூட்டத்தால் சுமார் 30 இடது முன்னணி ஊழியர்கள் கொல்லப்பட்டனர். இக்கூட்டத்தினரிடமிருந்து எண்ணற்ற துப்பாக்கிகள், வெடிமருந்துகள் உள்ளிட்ட ஆயுதங்களை - மாநில காவல்துறை அல்ல - மத்திய ரிசர்வ் காவல்படை கைப்பற்றியிருக்கிறது.

வெளியேற்றப்பட்ட அந்த மக்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவம், தங்களது தொழில்களில் அமைதியாக ஈடுபடவும் இடது முன்னணி அரசு தன்னால் இயன்ற அத்தனை முயற்சிகளையும் செய்துகொண்டிருக்கிறது. அந்த முயற்சிகளுக்கு துணையாக இருப்பதற்கு மாறாக, சில தொண்டு நிறுவனங்களும் - தங்களுக்கு வருகிற அந்நிய நிதிகளுக்கு விசுவாசமாக - நந்தி கிராமம் பிரச்சனை குறித்து நாடு முழுக்க திசைதிருப்பும் பிரச்சாரங்களை செய்து வருகின்றன.
இப்படிப்பட்ட பிரச்சாரங்களுக்கு சிலர் இரையாவது இயற்கைதான். ஆனால் பகுத்தறிவோடு பிரச்சனைகளை அணுக வேண்டிய மனித உரிமைகள் ஆணையம் இரையாகலாமா? நந்தி கிராமம் பிரச்சனை குறித்து ஆணையத்தின் விசாரணை முழுமையாக முடிந்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாவதற்கு முன்பே அதன் தலைவர் இப்படி குஜராத்தையும் நந்தி கிராமத்தையும் ஒப்பிட்டது என்ன நியாயம்?

மேலோட்டமான தனிமனித உரிமை பேசிக்கொண்டு ஒட்டுமொத்தமான ஜனநாயக உரிமைகளை புதைகுழிக்கு அனுப்ப முயல்கிறவர்களின் குரலை ராஜேந்திர பாபுவும் எதிரொலித்திருப்பது வேதனையானது மட்டுமல்ல, விபரீதமானதும் கூட.

விரைவில் உண்மைகள் வெளியாகும். உள்ளங்கள் அதில் தெளிவாகும் - தேசிய மனித உரிமை ஆணையத் தலைவருக்கும்.
அ.குமரேசன்

வங்க மக்களுக்கு உலக அறிஞர்களின் பகிரங்க கடிதம்

மேற்கு வங்க மக்களிடையே பிளவு ஏற்படுத்த முயல்வோர் குறித்து கவலை தெரிவித்தும், அதை முறியடிக்க வேண்டுகோள் விடுத்தும் நோம் சோம்ஸ்கி உள்ளிட்ட உலகப்புகழ் பெற்ற சிந்தனையாளர்கள் கூட்டாக ஒரு பகிரங்கக் கடிதம் வெளியிட்டுள்ளனர்.
அக்கடிதம் வருமாறு:எமது வங்காள நண்பர்களுக்கு,மேற்கு வங்க நிகழ்வுகள் குறித்து எங்களை வந்தடையும் செய்திகள், அந்த மாநிலத்தில் எங்களில் சிலர் மேற்கொண்ட பயணங்களின்போது ஏற்பட்ட நம்பிக்கைகளைப் பின்னுக்குத் தள்ளுவதாக உள்ளன. ஒரே விதமான மாண்புகளைக் கொண்டுள்ள மக்களிடையே, இணைக்க முடியாத இடைவெளிகளை ஏற்படுத்தும் வகையில், பொது வெளியைப் பிளவுபடுத்தியுள்ள வெறுப்புணர்வு எங்களுக்குக் கவலையை ஏற்படுத்துகிறது. அதுதான் எங்களுக்கு வேதனையைத் தருகிறது.
இந்த இடைவெளியின் இரு மருங்கிலும் உள்ளவர்கள் சொல்வது எங்கள் காதில் விழுகிறது; அதிலிருந்து நிகழ்வுகள் குறித்தும் அவற்றின் இயக்குவிசைகள் குறித்தும் ஓரளவு புரிந்து கொள்ள முயல்கிறோம். நம்மிடையே உள்ள தொலைவு, எதையும் திட்டவட்டமாக கூறவியலாமல் எங்களைத் தடுக்கிறது.மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட (நிலச் சீர்திருத்தம், உள்ளாட்சி போன்ற) சில முக்கியமான பரிசோதனைகளை, சில பிரச்சனைகள் மீதான கருத்து வேறுபாடுகள் கிழித்துப் போட்டுவிட வங்காள மக்கள் அனுமதிக்கமாட்டார்கள் என்று நாங்கள் தொடர்ந்து நம்புகிறோம்.வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட விவசாயிகளோடு எங்களது முழுமையான ஒருமைப்பாட்டை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். நந்திராமத்தைச் சுற்றியுள்ள பகுதியில் ரசாயனத் தொழில் வளாகம் அமைக்கப்பட மாட்டாது என்று மேற்கு வங்க அரசு உறுதி அளித்திருப்பதாக நாங்கள் அறிகிறோம்.
வன்முறையால் வெளியேற்றப்பட்டவர்கள் இப்போது பழிவாங்கல் ஏதுமின்றித் தங்களது வீடுகளுக்கு திரும்ப முடிகிறது என்பதும் எங்களுக்குத் தெரியவருகிறது. நல்லிணக்கத்திற்கான முயற்சிகள் நடப்பதையும் நாங்கள் புரிந்து கொள்கிறோம். நாங்கள் விரும்புவதும் அதுதான்.
உலக சக்திகளின் இன்றைய வலிமை நிலைகள் காரணமாக, இடதுசாரி சக்திகளைத் துண்டாடுவது ஒரு மூர்க்கத்தனமான பாதிப்புகளுக்கு இட்டுச் சென்றுவிடக்கூடும். ஒரு நாட்டின் (இராக்) அரசைத் தகர்த்த ஒரு உலகமகா ஆதிக்க சக்தி, இப்போது இன்னொரு நாட்டையும் (ஈரான்) தகர்ப்பதற்குத் தயாராகி வருவதைப் பார்க்கிறோம். எனவே, வேறுபாட்டிற்கான அடிப்படைகள் இனியும் இல்லை என்ற நிலையில், இது பிரிந்து நிற்பதற்கான தருணம் அல்ல.-
இக்கடிதத்தில் கையெழுத்திட்டிருப்போர்:நோம் சோம்ஸ்கி(நூலாசிரியர்: `தோல்வியடைந்த அரசுகள்- தவறான அதிகாரமும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலும்')தாரிக் அலி(நூலாசிரியர்: `கரீபிய கொள்ளைக்காரர்கள்', ஆசிரியர்: `நியூ லெஃப்ட் ரிவ்யூ')ஹோவர்ட் ஜின்(நூலாசிரியர்: `அரசாங்களால் அடக்க முடியாத சக்தி')சூசன் ஜார்ஜ்(நூலாசிரியர்: `மற்றொரு உலகம் சாத்தியமே', இணையாசிரியர்: `எதிரியுடன் யுத்தம்- குவாண்டா நாமோவுக்கு ஒரு பிரிட்டிஷ் முஸ்லிமின் பயணம்', முன்னாள் ஆசிரியர்: `கார்டியன்')வால்டன் பெல்லோ(நூலாசிரியர்: `ஆதிக்கக் குழப்பங்கள் - அமெரிக்க சாம்ராஜ்யத்தின் தகர்வு')மகமூத் மம்தானி(நூலாசிரியர்: `குட் முஸ்லிம், பேட் முஸ்லிம்: அமெரிக்கா', `பனிப் போரும் பயங்கரவாத வேர்களும்')அகீல் பில்கிரானி(நூலாசிரியர்: `அரசியலும் அடையாளத்தின் தார்மீக மனநிலையும்')ரிச்சர்ட் ஃபால்க்(நூலாசிரியர்: `யுத்தத்தின் விலை - சர்வதேச சட்டமும் ஐ.நா. அமைப்பும்', `இராக்குப்பின் உலகம்')ஜீன் ப்ரிக்மான்ட்(நூலாசிரியர்: `மானுட ஏகாதிபத்தியம் - யுத்த விற்பனைக்காக மனித உரிமைகளை பயன்படுத்துதல்')மைக்கேல் ஆல்பர்ட்(நூலாசிரியர்: `பாரகான்- முதலாளித்துவத்திற்கு பின் வாழ்க்கை', ஆசிரியர்: `இசட்-நெட்'ஸ்டீபன் ஷாலோம்(நூலாசிரியர்: `ஏகாதிபத்திய புளுகுகள் - பனிப்போருக்குப் பிந்தைய அமெரிக்கத் தலையீடுகளை நியாயப்படுத்துதல்')சார்லஸ் டெர்பர்(நூலாசிரியர்: `லாபத்திற்கு முன் மக்கள் - பயங்கரவாத யுகத்தில் புதிய உலகமயமாக்கல்')விஜய் பிரசாத்(நூலாசிரியர்: `இருளடைந்த நாடுகள் - மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் வரலாறு')தமிழில்: அ.குமரேசன்

Wednesday, November 21, 2007

புனித கூட்டாளிகளின் முகமூடிகள்!

நந்திகிராம் - இது ஒரு குக்கிராமத்தின் பெயரல்ல இன்று. உலகத்தின் கண்கள் நந்திகிராமத்தை நோக்கியே உள்ளன. அங்கே உண்மையில் என்னதான் நடந்துக் கொண்டிருக்கிறது? 30 ஆண்டு மேற்குவங்க ஆட்சி இடதுசாரி வரலாற்றில் ஓர் சரித்திரம். நந்திகிராம் வாயிலாக அது உலகத்தின் அத்துனை மூலை முடுக்குகளுக்கும் சென்றுள்ளது. நந்திகிராம் மேற்குவங்க அரசை வீழ்த்துமா? என்ற கேள்விகள் யாருடைய நலனை காப்பதாக இருக்கும்! அதற்குள்தான் ஒளிந்திருக்கிறது ரகசியம்!

உலக வரலாற்றில் பிரஞ்சு புரட்சி முதல் ரஷ்ய புரட்சி வரை அதன் இளம் பருவத்திலேயே கொத்தி குதறத் துடித்தவர்களின் செஸ் கேம் தற்போது நந்திகிராமத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது! யாருடைய நலனை காப்பதற்காக?

பாசிஸ்ட்டுகளை நாம் அடையாளம் காட்டத் தேவையில்லை! இந்தியாவில் அது மோடியிசமாகவும் - அத்வானியிஸமாகவும் உருவெடுத்துள்ளதை நாம் கூறித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை!

ஆனால் பயங்கரவாதம் அப்படியல்ல! பயங்கரவாதம் என்றால் நமக்கு அந்த ஒல்லியான உருவம்தான் ஞாபகம் வருகிறது. அதுதான் பின்லேடன்! அவன் மட்டுமா பயங்கரவாதி? ஈராக்கிலும் - ஆப்கானிஸ்தானிலும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோரை கொன்றுக் கொண்டிக்கும் ஏகாதிபத்திய அமெரிக்காவையும் அதன் கூட்டாளிகளையும் என்ன வென்று அழைப்பது!

பயங்கரவாதம் இவர்களுக்கு மட்டும் உரியதா என்ன? மாவோயிஸம் என்ற பெயரில் நக்சல்பாரியில் தோற்றவர்கள் நந்திகிராமத்தில் பாசிஸ்டுகளோடு கூட்டு சேர்ந்து வருகிறார்கள்? அவர்களின் புதிய வர்க்க கூட்டாளிகள் அத்வானியும் - அம்மா மமதாவும் என்பதை இன்று உலகம் அறிந்து கொண்டது! மேற்குவங்க மக்கள் மட்டும் அல்ல நாமும்தான் கேட்கிறோம் யாருடைய நலனை காப்பதற்காக இந்த புனிதக்கூட்டு!

நந்திகிராமில் நடப்பது என்ன? இதே உங்களிடையே உண்மைகளை உரைக்க வருகிறது. இந்த வலைப்பதிவு. பதிவு செய்வோம் நமது கருத்துக்களை ஒரே குடையின் கீழ். நவீன பாஸிஸ்ட்டுகளை - உழைக்கும் மக்கள் விரோதிகளை தோலுரிப்போம்!